இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: யாசின் உட்பட 5 பேருக்கு மரண தண்டனை

என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப் பைச் சேர்ந்த யாசின் பட்கல் உட்பட 5 பேருக்கு என்ஐஏ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஹைதராபாத் தில்ஷுக் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி இரவு 7 மணியளவில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 18 பேர் பலியாயினர், 130 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்கு தலுக்கு, தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் (ஐஎம்) தீவிரவாத அமைப்பு பொறுப் பேற்றுக் கொண்டது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் யாசின் பட்கல், அசதுல்லா அக்தர், தஹசீன் அக்தர், ஜியா உர் ரஹ்மான், அஜாஸ் ஷேக் ஆகிய 5 பேரை என்ஐஏ கைது செய்தது.

இவர்கள் அனைவரும் ஹைதரா பாத்தில் உள்ள செர்லாபல்லி மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி சிறைச்சாலை வளாகத்திலேயே என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அமைக் கப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ரியாஸ் பட்கல் என்ற ஷா ரியாஸ் அகமது முகமது இஸ்மாயில் ஷாபண்டாரி தலைமறைவாக உள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவரைப் பிடிக்க என்ஐஏ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது, 158 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் 201 ஆதாரங்கள், 502 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன.

விசாரணை முடிந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என கூறி இருந்தது.

இதையடுத்து நேற்று காலையில் செர்லாபல்லி சிறைச் சாலை மற்றும் ஹைதராபாத்தின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், யாசின் பட்கல் உட்பட குற்றவாளிகள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவ தாக நீதிமன்றம் அறிவித்தது. மரண தண்டனை தவிர, அனைவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பின் நகல் நேற்று மாலை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதனிடையே, இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT