சட்டவிரோதமாக வீட்டில் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் நடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். இவர் அமைச்சராக இருந்த போது, கடந்த ஜூன் 2004-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் வரையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 364 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்பின்னர் டிசம்பர் 2006-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2007-ம் ஆண்டு வரை சென்னை போட் கிளப் சாலையில் உள்ள தயாநிதி மாறனின் புதிய இல்லத்தில் 353 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.1.78 கோடி இழப்பு
அதன்பின்னர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்துக்காக அந்த தொலைபேசி இணைப்புகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், இவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தவிர குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறனின் அப்போதைய தனிச் செயலாளர் மற்றும் 2 பிஎஸ்என்எஸ் தலைமை பொது மேலாளர்களின் (தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர்) பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.