டெல்லி: இந்திய மற்றும் சீன ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மோதிக்கொண்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. மூன்று நாட்கள் முன்பு இந்த மோதல் நடந்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தச் சண்டை நடந்துள்ளது. சீன ராணுவத்தினர் விதிகளைமீறி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அத்துமீறி வந்ததால் இந்த மோதல் உருவானது என்று தெரிகிறது. இதேபகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் தைரியத்துடன் சீன ராணுவத்தை எதிர்த்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும், இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன என்று சொல்லப்படுகிறது. இந்திய வீரர்கள் குவாஹத்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பதற்றங்களுக்கு வழிவகுத்தது.
இதன்பின் இருநாட்டு ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்திய மற்றும் சீன ராணுவங்கள் பின்வாங்கின. என்றாலும், கல்வான் மோதலுக்குப் பிறகு, இந்திய-சீனப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது இதுவே முதல்முறை.