இந்தியா

குஜராத்தில் இன்று பதவியேற்பு விழா: 200 சாதுக்களுக்கு சிறப்பு அழைப்பு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தில் இன்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைகிறது. பூபேந்தர் படேல் மீண்டும் முதல்வராகிறார். இவர்களுடன் 25 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 200 சாதுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காந்திநகரில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
தவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலரும் பங்கேற்கின்றனர். குறிப்பாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்தியப் பிரதேச முதல் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, உத்தர்கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மூத்த தலைவர் பிஎல் சந்தோஷ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் 200 சாதுக்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதுமிருந்து பல்வேறு மடங்களின் சாமியார்கள், சாதுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64.3 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வகையில் 156 தொகுதிகளில் வென்று, 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸுக்கு 17, ஆம் ஆத்மிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில் இன்று குஜராத் அரசு பதவியேற்பு.

SCROLL FOR NEXT