ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சட்ட விரோதமாக வரி வசூல் செய்தது தொடர்பாக, ரூ.152 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநில முதல்வரின் துணைச் செயலர் சவுமியா சவுராசியா உட்பட இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களுக்குச் சொந்தமான வேளாண் நிலங்கள், வர்த்தக நிலங்கள் உட்பட 91 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துஉள்ளது.
தொழிலதிபரின் 65 சொத்து
சத்தீஸ்கர் மாநில தொழிலதிபர் சூர்யகாந்த் திவாரியிடமிருந்து 65 சொத்துகள், அம்மாநில முதல்வரின் துணைச் செயலர் சவுமியா சவுராசியாவிடமிருந்து 21 சொத்துகள், ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோயிடமிருந்து 5 சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த சனிக்கிழமை முடக்கியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், 2020 ஜூலை மாதம் நிலக்கரி சுரங்கத்தில் இயக்கப்படும் லாரிகளுக்கான அனுமதி தொடர்பாக புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதுவரையில், நிலக்கரிச் சுரங்கத் திலிருந்து நிலக்கரியை வெட்டி எடுத்து வர லாரி உரிமையாளர்கள் இணையதளம் மூலமாக அனுமதி பெற்றனர். இந்நிலையில், நேரில் அனுமதி பெறும் வகையில் நிலக்கரி சுரங்கக் கொள்கையில் சத்தீஸ்கர் அரசு மாற்றம் கொண்டு வந்தது.
தினமும் கோடிக்கணக்கில்..
இதைப் பயன்படுத்தி சூர்யகாந்த் திவாரி உட்பட முக்கியமான தொழிலதிபர்கள் லாரி உரிமையாளர்களிடமிருந்து பணம்பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 1 டன் நிலக் கரியை ஏற்றிச்செல்ல ரூ.25 வரி வசூலித்தனர். தினமும் கோடிக் கணக்கில், சட்டவிரோதமாக லாரி உரிமையாளர்களிடமிருந்து அவர்கள் வரி வசூலித்துள்ளனர்.
இம்மோசடி தொடர்பாக சூர்யகாந்த் திவாரி, சவுமியா சவுராசியா, சமீர் விஷ்னோய் ஆகியாரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவர்களிடமிருந்து ரூ.152 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
ரூ.540 கோடி வசூல்
இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை கூறுகையில், “ஆயிரக்கணக்கான டயரிக் குறிப் புகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் வங்கி பரிவர்த்தனைகளை அலசி ஆராய்ந்ததில், நிலக்கரி சுரங்கப் போக்குவரத்துத் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.540 கோடி மிரட்டி பறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டவர்களை விசா ரணைக்கு உட்படுத்தியுள்ளோம். இந்தப் பணம் பறிப்பு மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. அரசுத் துறையில் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த பணம் பறிப்பு நடந்திருக்க முடி யாது” என்று தெரிவித்துள்ளது.