நாடு முழுவதும் சிறிய மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கு மக்களவை முன்னாள் தலைவரும் தேசிய மக்கள் கட்சித் தலைவருமான பி.ஏ. சங்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் துரா நகரில் உள்ள தனது வீட்டிலிருந்தபடி வெள்ளிக்கிழமை கூறுகையில், "நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கூர்க்காலாந்து, போடோலாந்து, கர்பி அங்லாங், பந்தல் கந்த், விதர்பா ஆகிய பகுதிகளை தனி மாநிலமாக அறிவிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டில் அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக இத்தகைய கோரிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்" என்றார்.
ஏற்கெனவே 9 முறை மக்களவை உறுப்பினராக இருந்த சங்மா, கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு தேசிய மக்கள் கட்சியைத் தொடங்கினார். வரும் தேர்தலில் துரா மக்களவை தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் மீண்டும் தேசிய அரசி யலுக்கு திரும்பி உள்ளார்.