குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ.,க்களின் கூட்டம் காந்திநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். படம்: பிடிஐ 
இந்தியா

குஜராத் முதல்வராக நாளை பூபேந்திர படேல் பதவியேற்பு

செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 2-வது முறை பூபேந்திர படேல் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து புதிய பாஜக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் காந்திநகரில் நேற்று நடந்தது. அதில் பூபேந்திர படேலை(60) மீண்டும் குஜராத் முதல்வராக்க ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.

இதையடுத்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், ‘‘குஜராத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பாஜக எம்எல்ஏ.,க்கள் கட்சி தலைமையகமான கமலத்தில் நேற்று ஒன்று கூடி, சட்டப்பேரவை கட்சி தலைவராக பூபேந்திர படேலை ஒருமனதாக தேர்வு செய்தனர்’’ என தெரிவித்தது.

இவர் அகமதாபாத் மாவட்டம் காட்லோடியா தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில், இவர் விஜய் ரூபானிக்கு பதில் முதல்வராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2-வது முறையாக குஜராத் முதல்வராக நாளை பதவியேற்கிறார். காந்திநகரில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT