இந்தியா

தமிழகத்துக்கு கர்நாடக பேருந்துகள் இயக்கம்: எல்லையில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

இரா.வினோத்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து நிறுத்தப்பட்ட கர்நாடகா - தமிழகம் இடையேயான பேருந்து சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. இதனால் இரு மாநில பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு உயிரிழந்தார். இந்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கர்நாடக அரசின் 3 பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியதால் கடந்த இரு தினங்களாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் ரயில்களில் மக்கள் பயணித்ததால் அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது.

இதனால் பெங்களூருவில் இருந்து சென்னை, சேலம், வேலூர், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் 450 அரசுப் பேருந்துகள் நேற்று பிற்பகல் முதல் இயக்கப்பட்டன. இதே போல மைசூரு, சாம்ராஜ்நகர், குண்டல் பேட்டை ஆகிய இடங்களில் இருந்து ஊட்டி, கொடைக்கானல், ச‌த்தியமங்கலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும் 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கியதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. கர்நாடகாவில் இருந்து பேருந்துகள் தமிழகத்துக்கு இயக்கப்பட்டாலும் இரு மாநில எல்லைகளிலும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

SCROLL FOR NEXT