அகமதாபாத்: கடந்த 1960-ம் ஆண்டு குஜராத் மாநிலம் உதயமானது. ஆரம்ப கால சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த 1975, 1990-ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் அல்லாத அரசு ஆட்சி அமைத்தது.
கடந்த 1985-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர் மாதவ் சிங் சோலங்கி தலைமையில் அக்கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுவே குஜராத் தேர்தலின் வரலாற்று சாதனையாக இருந்தது. தற்போதைய தேர்தலில் 156 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக, காங்கிரஸின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ல் நடந்த தேர்தலில் பாஜக 127 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதுவே பாஜக இதுவரை பெற்ற அதிக இடங்களாக இருந்தது.
குஜராத்தில் கடந்த 1995-ம் ஆண்டில் பாஜகவின் வெற்றிப் பயணம் தொடங்கியது. அந்த ஆண்டு கட்சியின் மூத்த தலைவர்கேசுபாய் படேல் தலைமையில் முதல்முறையாக பாஜக ஆட்சிஅமைத்தது. பாஜக மூத்த தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா கடந்த 1996-ல் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி காங்கிரஸுடன் கைகோத்து ஆட்சி அமைத்தார். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு 1997-ம் ஆண்டு அக்டோபரில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த திலிப் பார்க் முதல்வராக பதவியேற்று 1998 மார்ச் வரை பதவியில் நீடித்தார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் இப்போது வரை குஜராத்தில் பாஜகவின் கொடி பறக்கிறது.