புதுடெல்லி: காஷ்மீர் பண்டிட்கள் அதிக அளவில் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரும் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
காஷ்மீரில் கடந்த 1989 முதல் 1998 வரையிலான காலத்தில் காஷ்மீர் பண்டிட்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 700 பேர்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டபோதும் அதன் மீது மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, ‘ரூட்ஸ் இன்காஷ்மீர்’ என்ற காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில்,“காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிஐ அல்லது என்ஐஏ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம்ஆண்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து, காஷ்மீர் பண்டிட்கள் அமைப்பு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அந்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.