ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உட்பட 3 பேரை 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தியாகி, இவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வழக்கறிஞர் கவுதம் கேத்தான் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. அவர்களிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ.க்கு கடந்த 14-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி மூன்று பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது.
மூன்று நாள் அனுமதி சனிக்கிழமை முடிந்த நிலையில், தியாகி உட்பட 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிஐ கால நீட்டிப்பு கேட்கவில்லை.
இதையடுத்து 3 பேரையும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி அர்விந்த் குமார் நேற்று உத்தரவிட்டார். முன்னதாக 3 பேர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியின்போது, விவிஐபி.க்கள் செல்வதற்காக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழலில் விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, இவருடைய உறவினர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.