இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் நியமனத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஜனவரி 4-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹரை மத்திய அரசு பரிந்துரைத்தது. அதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து ஆணை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், கேஹர் நியமனத்தை எதிர்த்து, நீதித்துறையில் வெளிப்படை தன்மை மற்றும் சீர்த்திருத்தம் தொடர்பான தேசிய வழக்கறிஞர்கள் விழிப்புணர்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பரா ஆஜராகி கேஹர் நியமனத்துக்கு எதிராக வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது, ‘‘நீதிபதி கேஹரின் திறமைகள் பற்றி மனுதாரர்கள் புகழ்ந்து கூறியுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு கேஹர் தகுதியற்றவர் என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. மேலும், நீதிபதிகள் நியமனங்களை மேற்கொள்ளும் கொலீஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT