1984-ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார். இதையடுத்து டெல்லி யில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்ற அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் கூடுதல் அமர்வு நீதிபதி விகாஸ் துல், முன் ஜாமீன் வழங்கினார்.
1984-ல் நடந்த கலவரம் தொடர் பாக, முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, சோகன் சிங், அவரது மருமகன் அவதார் சிங் என்ற 2 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜானக்புரி காவல் நிலையத்திலும் மறுநாள் குர்சரண் சிங் என்ற சீக்கியர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் விகாஸ்புரி காவல் நிலையத்திலும் சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சஜ்ஜன் குமார் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர்கள் மற்றும் அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதி தனது தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கினார்.