காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. காந்திநகருக்கு அருகே ரேசான் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து தனது குடும்பத்தாருடன் வந்த அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பிரதமரின் தாயார் கடந்த ஜூன் மாதம் 100-வது வயதை எட்டினார்.
முன்னதாக பிரதமர் மோடி நிஷான் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த சபர்மதி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத், இமாச்சல பிரதேசம், டெல்லி மக்கள் ஜனநாயக திரு விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடினர். அவர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.