இந்தியா

பண மதிப்பு நீக்க விவகாரம்: பிரணாப்புடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

செய்திப்பிரிவு

பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.

‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி மறுக் கப்படுகிறது. அரசின் நடவடிக்கை யால் விவசாயிகள், சிறு வியா பாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்’ என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடியரசுத் தலைவரை சந்தித்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிடக் கோரி மனு அளித்துள்ளோம். மத்திய அரசு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான குழுவில் திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இடம் பெற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியதால் எதிர்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடைசி நேரத்தில் விலகிவிட்டன.

SCROLL FOR NEXT