மக்களுக்காக மக்களால் ஆளப்படும் அரசு அல்ல , இது முற்றிலும் அன்னிய நேரடி முதலீட்டிற்கான அரசு என்று பாஜக அரசின் முதல் பட்ஜெட்டை மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி உள்ளார்.
2014-15 ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான முதல் பொது பட்ஜெட்டுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் தங்களது எதிர்ப்பினையும் விமர்சனங்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து திரிணமூல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கையில், "பொது பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வை, குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. மொத்தத்தில் இது செயலற்ற பட்ஜெட். ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் எதுவும் இதில் இல்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன், 'வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவை உருவாக்குவோம்' என்று கூறியவர்கள் அதற்காக செய்ய வேண்டியதை இன்னும் செய்யவில்லை. அதற்கு மாறான செயல்களில் மட்டும் ஈடுப்பட்ட வருகின்றனர்.
ஆனால், ஒரு விஷயத்தில் மிக தெளிவாக உள்ளார்கள். ரயில்வே பட்ஜெட்டிலும், பொது பட்ஜெட்டிலுமே அவை வெளிப்பட்டு விட்டன.
மக்களுடைய அரசாங்கம், மக்களுக்கான அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்ற கூற்று மாறி போய், அன்னிய நேரடி முதலீட்டிற்கான அரசாங்கமாக இந்த அரசு செயல்படுகிறது.
ஏற்கனவே, சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு உள்ளது. தற்போது, பாதுகாப்புத்துறை மற்றும் காப்பீடு துறைகளில் 49% அன்னிய முதலீட்டை கொண்டுவர வழி செய்யப்பட உள்ளது. இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக மக்களைத்தான் பாதிக்கப்போகிறது.
இந்த அரசு பழிவாங்கும் தனது நோக்கத்தை இரண்டு பட்ஜெட்டிலுமே வெளிப்படுத்திவிட்டது. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியது.
ஜவுளித் துறையில் மேற்கு வங்கம் சிறந்து விளங்குகிறது. ஆனாலும், ஜவுளி பூங்காக்கள் அமைப்பதாக கூறப்பட்ட இடங்களில் மேற்கு வங்கம் இடம்பெறவில்லை" என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.