மீரட்டைச் சேர்ந்த ஷீதல், தன்னுடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.99,99,99,394 இருப்பதாகப் பிரதமர் அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, அவரின் வைப்புத்தொகை மைனஸ் குறியீட்டில் இருந்ததை வாடிக்கையாளர் கவனிக்கத் தவறியதாகக் கூறியுள்ளது.
ஷீத்தலின் வங்கிக் கணக்கில் கேஒய்சி (வாடிக்கையாளரின் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள்) முறையாக நிரப்பப்படாததால் வங்கி, அவரின் பணப்பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்ததாகவும், அப்போது பண வைப்புத்தொகை தவறாக பிரதிபலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மீரட் கிளை தெரிவித்துள்ளது.
ஜன் தன் கணக்கில் ரூ. 100 கோடி
பாரத ஸ்டேட் வங்கியின் மீரட் கிளையில் உள்ள தன்னுடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதைக் கண்ட ஷீத்தல் யாதவ் என்ற பெண், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் என்று கோரிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்னுடைய கணக்கில் ரூ.100 கோடி வரவு வைப்பு குறித்து ஷீத்தல் யாதவ், வங்கி அதிகாரிகளிடம் சென்று பலமுறை புகார் கொடுக்க முயற்சித்தும், அதிகாரிகள் பிறகு பார்க்கலாம் என்று தொடர்ந்து அலைக்கழித்த பிறகு அவர் பிரதமர் அலுவகத்தை நாடியதாகக் கூறியிருந்தார்.
இந்தப் புகாரை ஷீத்தல் யாதவின் கணவர் சிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முழுமைபெறாத கேஒய்சி
இதுகுறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழிடம் பேசிய எஸ்பிஐயின் பிரம்மபுரி கிளை துணை மேலாளர் சுஷில் குமார் சேத்தி, ''ஷீத்தலின் வங்கிக் கணக்கில் கேஒய்சி விவரம் முழுமை பெறாமல் இருந்தது. அதனால் வங்கியின் பாதுகாப்புக் காரணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவரின் பரிவர்த்தனைகள் நிறுத்திவைக்கப்பட்டன. அப்போது ஏதேனும் கோளாறுகள் காரணமாக பண வைப்புத்தொகை தவறாக பிரதிபலிக்கப்பட்டிருக்கலாம்.
அதே நேரத்தில் பண வைப்புத்தொகை மைனஸில் இருந்தது. ஆனால் ஷீத்தல் குடும்பத்தினர் அதை தவறாகப் புரிந்துகொண்டு தங்களின் கணக்கில் கோடிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகப் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையை ஏற்கெனவே வருமான வரித்துறைக்கு அனுப்பி விட்டோம்'' என்றார்.
வழக்கத்தில் இல்லாத நடைமுறை
அதே நேரத்தில் வங்கியின் இந்த நடைமுறை குறித்துப் பேசிய மற்ற வங்கிகளின் அதிகாரிகள், இதுபோல பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்கும் நடைமுறை வழக்கத்தில் இல்லை என்று தெரிவித்தனர்.
இதுபற்றிப் பேசிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளர் கேசவ் கரோத்தியா, ''வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்கள் முழுமையாக இல்லாமல் இருந்தாலும், கணக்கில் கைவைக்க வங்கிக்கு எந்த உரிமையும் இல்லை. என்னுடைய அனுபவத்தில் இத்தகைய சம்பவத்தை நான் எதிர்கொண்டதே இல்லை. ஆர்பிஐ விதிமுறைகளின்படி, கேஒய்சி இல்லாதபோது ஆறு மாத காலத்தில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கில் இருப்பு வைக்கமுடியாது. 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுக்க முடியாது.
அத்தகைய நேரங்களில் வங்கி, குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு கடிதம் அனுப்பித் தெரியப்படுத்திய பிறகே, பரிவர்த்தனைகளை நிறுத்திவைக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து எஸ்பிஐ மூத்த வங்கி அதிகாரி கூறும்போது, ''வங்கிகளின் இத்தகைய நடைமுறைகள் தவறானவை; இதனால் குழப்பமே விளையும்'' என்றார்.
தவறை ஒப்புக்கொண்ட வங்கி
இதுகுறித்து பேசிய ஷீத்தலின் கணவர் சுலேதர் சிங், ''ஊடகங்களின் தலையீட்டுக்குப் பிறகு வங்கி அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்து, பிரச்சனையைக் கேட்டறிந்தனர். தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டவர்கள், கணக்கில் ரூ.611 மட்டுமே உள்ளது என்று கூறினர். அதே நேரத்தில் அவர்கள் மைனஸ் குறியீட்டோடு வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர். ஆனால் ஏடிஎம் திரையிலோ, ரசீதுகளிலோ மைனஸ் குறியீடு இல்லை.
தற்போது எங்களின் பிரச்சனை தீர்ந்துவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வங்கி அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்'' என்றார்.