புனேவில் உள்ள வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.10.80 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில், ரூ.8.8 கோடி மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில், பார்வதி பகுதியில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த 15 லாக்கர்களை வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திறந்து சோதனை நடத்தினர்.
அதில், ரூ.9.85 மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் இருந்தன. அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை அளவில் 39,896 தாள்கள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு மட்டும் ரூ. 7.97 கோடியாகும். மற்றவை 100 ரூபாய் தாள்களில் இருந்தன.
ஒரே வங்கியில் 15 லாக்கர்களும் ஒரே நபரின் பெயரில் ஆகஸ்ட் மாதத்தில் பெறப்பட்டுள்ளன. இந்த லாக்கர் களை ஒதுக்கியதிலும், பயன்படுத்தியதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். திட்டமிட்ட வரி ஏய்ப்பு முயற்சி யாகவே இதனை அதிகாரிகள் கருதுகின்றனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, 2 லாக்கர்கள் மட்டும் தனித்தனியே 12 முறை வெவ்வேறு தேதிகளில் இயக்கப்பட்டுள்ளன. அந்த சமயங்களில் ஒரு நபர் பெரிய பைகளுடன் வங்கிக்கு உள்ளேயும், வெளியேயும் நடமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் உள்ள மற்ற வங்கி லாக்கர்களில் இருந்து, புதிய கரன்சி நோட்டுகளாக மேலும் ரூ.80 லட்சத்தை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மொத்தம், ரூ.10.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதில் ரூ.8.8 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, டெல்லி கன்னாட் பிளேஸ், நொய்டா ஆகிய இடங்களில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எனினும் அங்கு பணப் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் இல்லை.