இந்தியா

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.25 லட்சம் கோடி இழப்பீடு - மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய வேளாண் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டத்தின் கீழ் தவிர்க்க முடியாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகையை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016-ல் தொடங்கியது முதல், விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு இழப்பீடாக கடந்த 6 ஆண்டுகளில் அதாவது அக்டோபர் 31, 2022 வரை ரூ.1,25,662 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரீமியத் தொகையின் பெரும் பகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

உலகின் மூன்றாவது பெரிய பயிர் காப்பீடு திட்டமாக பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் விண்ணப்பம் அளிப்பதால் வரும்ஆண்டுகளில் இத்திட்டம் மேலும்விரிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு மத்திய வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT