இந்தியா

விஜய் மல்லையா ட்விட்டர் கணக்கில் அத்துமீறல்; சொத்து விவரம் வெளியிடப்போவதாக ஹேக்கர்கள் மிரட்டல்

செய்திப்பிரிவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் இ-மெயில் கணக்குகளில் அத்துமீறி நுழைந்த ஹேக்கர்கள், அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்து விவரத்தை வெளியிடப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

தங்களை லீஜன் (Legion) என்று அழைத்துக்கொண்ட ஹேக்கர்கள், விஜய் மல்லையாவின் ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

அதில், விஜய் மல்லையா தொடர்பான முகவரிகள், போன் நம்பர்கள் மற்றும் இ-மெயில் ஐடிக்கள், அவற்றின் பாஸ்வேர்டுகளை வசப்படுத்தி வைத்திருப்பதாக 'லீஜன்' ஹேக்கர்கள் குழு ட்வீட்டியிருக்கிறது.

அத்துடன், விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்து விவரம், வங்கிக் கணக்கு விவரம் என சில ஆவணங்களையும் ட்வீட் செய்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் மல்லையாவிடம் இருப்பதாக சில ஆடம்பர கார்களின் விவரத்தையும் வெளியிட்டு, இவை அனைத்தும் ஒரு பகுதி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அடுத்த சில தினங்களில் மல்லையாவின் வங்கிக் கணக்கு விவரம், வெளிநாட்டு சொத்துகள் என அனைத்து விவரத்தையும் ட்விட்டரில் வெளியிடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தங்களது இந்த ஹேக்கிங் மற்றும் அம்பல முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்களுக்கு லீஜன் குழு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளது.

என்ன சொல்கிறார் விஜய் மல்லையா?

தமது ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் அத்துமீறி நுழையப்பட்டது குறித்து வெள்ளிக்கிழமை அதே கணக்கின் இரு ட்வீட்கள் மூலம் தெரிவித்த விஜய் மல்லையா, "லீஜன் என்ற குழு எனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து என் பெயரில் ட்வீட் செய்து வருகிறது. அவற்றைக் கண்டுகொள்ளாதீர்கள்.

ட்விட்டர் கணக்கு விரைவில் மீட்கப்படும். என்னுடைய இ-மெயில் கணக்குகளை ஹேக் செய்துவிட்டதாக சொல்லும் லீஜன் குழு, என்னையே மிரட்டி வருகிறது. இது எவ்வளவு பெரிய ஜோக்!" என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT