இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: தூதரக இணையதளங்களில் ஊடுருவல்

செய்திப்பிரிவு

மக்களவை, மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

நிதி ஆயோக்கில் பதிவு செய்வது கட்டாயம்

திட்டத்துறை இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: நாடு முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ஜிஒ தர்பான் என்ற நிதி ஆயோக் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் பதிவு செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு தனிப்பட்ட அடையாள முகவரி வழங்கப்படும். அதன்பிறகே மத்திய அரசின் நிதியுதவிகளை கோரி தொண்டு அமைப்புகள் விண்ணப்பிக்க முடியும். கடந்த மாதம் 24-ம் தேதி வரை மொத்தம் 81,353 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளன.

தூதரக இணையதளங்களில் ஊடுருவல்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்: வெளிநாடுகளில் இயங்கி வரும் சில இந்திய தூதரங்களின் இணையதளங்களில் அங்கீகாரமில்லாத ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. எனினும் அரசின் எந்தவொரு தகவல்களும் திருடுப் போகவில்லை. இணையதளங்களில் உள்ள முக்கியத் தகவல்களை பாதுகாக்க சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தகவல் உரிமை சட்டத்துக்கு ரூ.6 கோடி

மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங்: நடப்பு நிதியாண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பரவலாக்குவதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட (ரூ.21 கோடி) தொகையை விட குறைவாகும். கடந்த நவம்பர் 26-ம் தேதி வரை அரசு ரூ.3.94 கோடி செலவிட்டுள்ளது.

ரயில் நிலைய தூய்மை கண்காணிப்பு

ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹெயின்: ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் 340 முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தவிர, தூய்மை விஷயத்துக்காகவும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தும்படி அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் 2014, ஜூலையில் அறிவுரை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூய்மை விவகாரத்தை எவ்வாறு கண்காணிப்பது, எப்படி அமல்படுத்துவது என்ற விரிவான வழிமுறைகள் கடந்த 2016 மே மாதத்தில் ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதே போல் சீனா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை ஓட்டிய இந்திய எல்லைப் பகுதி வரை புதிய ரயில் தடங்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

காஷ்மீரில் வன்முறையை தூண்ட ஹவாலா

மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு: ஜம்மு காஷ்மீரில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்காக ஹவாலா மற்றும் பிற வழிகளில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணம் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாத இறுதி வரை ஜம்மு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 74 முறை ஊடுருவல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. தவிர அக்டோபர் வரை 201 ஊடுருவல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

SCROLL FOR NEXT