உடுப்பி: கர்நாடகாவில் கல்லூரி மாணவர் ஒருவரை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு கர்நாடகாவில் உள்ள உடுப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியர் ஒருவர் 26/11 மும்பைத் தாக்குதல் குறித்து பேசும்போது, வகுப்பு மாணவரிடம் ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்டுள்ளார். அவர் ஒரு இஸ்லாமிய மாணவர். மாணவர் தனது பெயரை கூறியதும், பேராசிரியர் ‘நீங்களும் கசாப் (மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர்) போன்றவரா?’ என்று கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோபமடைந்த அந்த மாணவர், “மும்பை தாக்குதல் சம்பவம் நிச்சயம் நகைச்சுவை கிடையாது. இஸ்லாமியனாக இருந்துகொண்டு நாளும் இதனை அனுப்பவிப்பது நகைசுவை கிடையாது” என்று ஆவேசமாகப் பேசினார்.
உடனே பேராசிரியர் “என்னை மன்னித்துவிடு... நீ என் மகனை போன்றவன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு மாணவர், “உங்கள் மகனை இப்படித்தான் தீவிரவாதியுடன் ஒப்பிடுவீர்களா? நீங்கள் எப்படி எல்லோர் முன்பும் என்னை இப்படி அழைக்கலாம்? நீங்கள் பேராசிரியர்... கற்பிக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்பதால் அது... நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதை மாற்றாது” என்று தெரிவித்தார்.
மாணவர் - பேராசிரியர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்த நிலையில், மாணவரை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி தெரிவித்துள்ளது.