இந்தியா

அவமதிப்பு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் நீதிபதி கட்ஜு

செய்திப்பிரிவு

சவுமியா கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த சவுமியா (23) கடந்த 2011 பிப்ரவரி 1-ம் தேதி எர்ணாகுளம்-சோரன்பூர் ரயிலில் பயணம் செய்தபோது கோவிந்தசாமி என்பவர் அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி பலாத்காரம் செய்தார். இதில் பலத்த காயமடைந்த சவுமியா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்தது. இத்தீர்ப்பை கேரள உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. எனினும் கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறை தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், உச்ச நீதீமன்ற நீதிபதிகள் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று விமர்சித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கட்ஜு கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த், யூ.யூ. லலித் ஆகியோருக்கும் கட்ஜுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கட்ஜுவின் பதில்களால் அதிருப்தி அடைந்த நீதிபதி கோகோய் நீதிமன்றத்தில் இருந்து அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். மேலும் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக 2 பக்க மனுவை முன்னாள் நீதிபதி கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

சமூக வலைதளத்தில் இருந்து எனது கருத்துகளை நீக்கிவிட்டேன். நீதிமன்ற நடவடிக்கைகள், நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். இதை நீதிமன்றத்திலும் வாசிக்க தயாராக உள்ளேன். என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT