ரூயா குழுமத்தின் தலைவர் பவன் ரூயா திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கம் மாநில சிஐடி போலீசார் புதுடெல்லி சுந்தர் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பவன் ரூயாவை கைது செய்தனர்.
ரயில்வே அமைச்சகம் கொடுத்த வழக்கின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். Jessop தொழிற்சாலையில் இருக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போகியுள்ளன. அதனால் அவர் மீது ரயில்வே அமைச்சகம் புகார் கொடுத்தது. ஐபிசி 420,406 மற்றும் 409 ஆகிய பிரிவுகளில் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்கு வங்க மாநில சிஐடி போலீசார், இந்த வழக்கு காரணமாக ரூயாவுக்கு 4 முறை சம்மன் அனுப்பியுள்ளது. அதனை அடுத்து ரூயா கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ரூயா உயர்நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்திருகிறார். Jessop நிறுவனத்தின் தலைவர், இயக்குநர் மற்றும் பங்குதாரர் என எந்த பொறுப்பிலும் நான் இல்லை என கூறியிருக்கிறார்.
ரயில்வே வேகன்களை உற்பத்தி செய்யும் Jessop நிறுவனத்தை 2003-ம் ஆண்டு ரூயா வாங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது. கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த ஆலையை அரசு ஏற்று நடத்தும் என அறிவித்தார்.