கர்நாடகாவில் தனியார் நிறு வனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் அங்கு வாழும் தமிழர், தெலுங்கர் உள்ளிட்ட பிற மொழியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர் களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், இதற்கு ஏற்ற வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக அரசின் தொழில் துறை அமைச்சகம், மாநில தொழில்துறை சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது. அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய சட்டங்களை இயற்றவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
புதியதாக கொண்டுவரப்பட உள்ள தொழில் துறை சட்டத்தில், “கர்நாடகாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் உதவி யாளர் உள்ளிட்ட 2-ம் நிலை பணியாளர்களை நியமிப்பதில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை வழங்காத நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் பெங்களூரு வில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்ட மசோதாவுக்கு தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு சித்தராமையா இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்புதல் வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசின் இந்த புதிய முடிவால் அங்கு கோடிக் கணக்கில் வாழும் தமிழ், தெலுங்கு, மராத்தி, குடகு, துளு, உருது உள்ளிட்ட பிறமொழியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கன்னடம் அல்லாத பிறமொழியினர் ஆவர்.
ஏற்கெனவே கர்நாடகாவில் அரசுத் துறைகளில் பிறமொழியினர் புறக்கணிக்கப் படுகிறார்கள். இந் நிலையில் “கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு மொழி சிறுபான்மை யினர் நலனுக்கு எதிரானது.எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது” என மொழி சிறுபான்மையினர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.