இளைஞர்கள் மூலம் மக்களிடையே மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள இளைஞர் அமைப்புகளுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் பிறகு, நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக மத்திய அரசு தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது இளைஞர்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் ஜனவரி 12-ல் கொண்டாடப்படும் இளைஞர்கள் தினத்தை மத்திய அரசு பயன் படுத்திக்கொள்ள உள்ளது. இது குறித்து இளைஞர்கள் இடம்பெற் றுள்ள, அரசு மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு மத்திய இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “மின்னணு பணப் பரிவர்த்தனை பற்றி அறிந்த இளைஞர் ஒவ்வொரு வரும் வரும் ஜனவரி 12-ம் தேதி அது குறித்த பயிற்சியை குறைந்தது 10 பேருக்கு அளிக்கவேண்டும். மின்னணு பணப் பரிவர்த்தனை பற்றி அறியாத இளைஞர்கள் அன்றைய தினத்தில் ஒரு செயல் முறையையாவது கற்றுக் கொள்வது அவசியம். அரசு அமைப் புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இது தொடர்பாக பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி, தேசிய இளைஞர் தினமாக கடந்த 1985-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதை எந்த வகையில் கொண்டாட வேண்டும் என அரசு இதுவரை கூறவில்லை. என்றாலும் இந்த நாளில் கருத்தரங்குகள், கண் மற்றும் ரத்ததான முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு நிகழ்ச்சிகளைப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதில் தற்போது முதல்முறையாக இளைஞர் தின நிகழ்ச்சி தொடர்பான ஓர் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் இளைஞர் நல அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “கடந்த ஏப்ரல் 18-ல் பிரதமருடன் எங்கள் அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இதில் பேசிய பிரதமர் ஒவ்வொரு ஆண்டு இளைஞர் தினத்திலும் ஒரு முக்கிய செயல்பாட்டை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற யோசனை அளித்தார். ஆனால், அந்த செயல்பாடு என்ன என்பது பற்றி அவர் கூறவில்லை. இதையொட்டி முதல்முறையாக எங்கள் அமைச்சகம் சார்பில் மின்னணு பணப் பரிவர்த்தனை கையில் எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 28-ல் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “மின்னணு பணப் பரிவர்த்தனையை நடைமுறைப் படுத்துவதில் இளைஞர்கள் போர் வீரர்கள் போல் செயல்பட்டு மக்களுக்கு உதவ வேண்டும்” என்றார். இந்நிலையில் இளைஞர் நல அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.