இந்தியா

ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையை ஏழைகள் மீது திணிக்காதீர்: ராகுல் காந்தி

பிடிஐ

காங்கிரஸ் ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனைக்கு எதிரானதல்ல என்றாலும் அம்முறை ஏழைகளின் மீது திணிக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பனாஜியில் ஃபடோர்டா கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் வெள்ளிக்கிழமை கலந்துகொண்ட ராகுல் காந்தி இதுகுறித்துப் பேசும்போது, ''நாங்கள் ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அந்த முறையை அரசாங்கம் ஏழைகளின் மீது திணிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் 100 ரூபாயை ரொக்கப்பணமாகக் கொடுத்தபோது அதற்குரிய முழு மதிப்பையும் பெற முடிந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனையில் 5 முதல் 6% பணத்தை அவர்கள் கமிஷனாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த 5 - 6% கமிஷன் பணம், 1 சதவீத உயர் பணக்காரர்களின் பாக்கெட்டுக்குள் செல்கிறது. அவர்கள் வேறு யாருமில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்கள்தாம்.

ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனை என்ற பெயரில் ஏழைகளைத் துன்பப்படுத்தக்கூடாது'' என்று கூறினார்.

வரவிருக்கும் கோவா தேர்தல் குறித்தும் பேசிய ராகுல் காந்தி, ''நாங்கள் வேலைவாய்ப்பின்மையை ஒழிப்போம். நிலங்களைக் காத்து சூதாட்டக் கூடங்களை ஒழிப்போம். கோவாவின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும். சிறிய அளவிலான ஊழல் என்றாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT