இந்தியா

புதிய நோட்டுகள் விநியோகத்தில் பாரபட்சமா? - ரிசர்வ் வங்கிக்கு மம்தா கேள்வி

பிடிஐ

புதிய நோட்டுகள் விநியோகத்தில் சில மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்படுகிறது என்று மம்தா பானர்ஜி புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படுகிறது என்ற விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதிய ரூ.500, ரூ.100 சென்றடையவில்லை என்று சாடியுள்ளார் மம்தா.

“ரூ.500, ரூ.100 நோட்டுகள் பெங்காலுக்கு வரவில்லை, பிற பகுதிகளுக்கும் அனுப்பப்படவில்லை. அது அரிதான ஒரு நோட்டாக போய் விட்டது. எந்த மாநிலம் எந்த நோட்டுகளைப் பெறுகிறது என்ற விவரத்தை ஆர்பிஐ வெளியிடட்டும்.

மாநிலங்களிடையே கடும் பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே உடனடியாக ஆர்பிஐ விவரங்களை வெளியிட வேண்டும். அனைத்தும் பாரபட்சம், எந்த வித திட்டமும் இல்லை.

சம்பளம் வாங்கும் பிரிவினர் தங்கள் பணத்தையே வங்கிகளிலிருந்து எடுக்க முடியவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகளில் இருப்பவர்களுக்கே இந்த நிலையென்றால் மற்ற பிரிவினருக்கு நேரும் கதியை கற்பனை செய்து கொள்ளலாம். மாநிலங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பணத்தைக் கூட ஆர்பிஐ அனுப்புவதில்லை, ஆனால் அறிவுப்புகளும் வாக்குறுதிகளும் வந்தவண்ணம் உள்ளன” என்று அறிக்கை ஒன்றில் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT