டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வியாழக்கிழமை திடீர் ராஜினாமா செய்ததை அடுத்து, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஜங்கின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார்.
நஜீப் ஜங், ஆம் ஆத்மி அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த நிலையில் ஜங்கின் ராஜினாமாவுக்குப் பிறகு இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், ''இருவரும் காலைச் சிற்றுண்டியின்போது சந்தித்தோம். அவரின் திடீர் ராஜினாமா எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. தன்னுடைய முடிவு குறித்து நஜீப் ஜங் எந்தப் புது தகவலையும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறினார்'' என்றார்.
கேஜ்ரிவால் மற்றும் நஜீப் ஜங் இடையிலான சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது.
ஜூலை 2013-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேஜேந்திர கன்னாவுக்குப் பிறகு டெல்லியின் துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார் நஜீப் ஜங். அதற்குப் பிறகு ஆட்சியமைத்த மோடி அரசு, பல்வேறு மாநில ஆளுநர்களை மாற்றிய போதிலும் டெல்லியில் ஜங்கே நீடித்தார்.
நஜீப் ஜங் தற்போது கல்வித்துறைக்கே திரும்புவேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.