இந்தியா

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் இருக்கிறது: உச்ச நீதிமன்றம்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரள அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் தனக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம் தொடர்பான ஆட்சேப மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அடுத்தகட்ட விசாரணை வரும் 15-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்க்கும் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை எனக் கூறிய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதுமட்டுமல்லாது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு தலா 2000 கன அடி நீர் வழங்கவும் கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தொடரும் என்றும் தெரிவித்தது.

தீர்ப்பும் எதிர்ப்பும்:

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007, பிப்ரவரி 5-ம் தேதி வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வில்கர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளதா என விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசின் வாதம்:

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதமாக சமர்ப்பித்தது. அதில், "நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது. எனவே காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பே இறுதியானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசமைப்பு சட்டப்படி தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய முடியாது. இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கும் முகாந்திரம் இல்லை. காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை நாடாளுமன்றம் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும் என மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பங்கீட்டு சட்டம் வலியுறுத்துகிறது" எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த வாதம் ஏற்பதற்கில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரள அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அதிகாரம் தனக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT