ஆந்திராவில் செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந் ததாக புகார் எழுந்ததையடுத்து, போலீஸ் டிஎஸ்பி உட்பட 3 போலீஸார் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திருப்பதி, கடப்பா, கர்னூல் ஆகிய மாவட்டங்களில் பரவி உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலுடன் காவல் துறையினர் சிலர் தொடர்பு வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், கடப்பா மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஐ.கள் உட்பட 31 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடப்பா மாவட்டம் மைதுகூரு டிஎஸ்பி ராமகிருஷ்ணய்யாவுக்கும் செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கடப்பா மாவட்ட எஸ்பி ராமகிருஷ்ணாவுக்கு ஆந்திர மாநில டிஜிபி சாம்பசிவ ராவ் உத்தரவிட்டார்.
டிஎஸ்பி ராமகிருஷ்ணய்யா வும் மேலும் 2 போலீஸாரும் செம்மர கடத்தல் கும்பலுக்கு பல்வேறு உதவிகளை செய்தது டன், அவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப் படையில், 3 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.
உயர் அதிகாரியே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், சித்தூர், திருப்பதி, நெல்லூர் ஆகிய நகரங்களில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்களுக்கிடையே அச்சம் நிலவி வருகிறது.