இந்தியா

உ.பி.யில் ஆசம் கானுக்கு நெருக்கமான ஃபசகத் அலி கான் பாஜகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவுமான ஆசம் கானுக்கு அவதூறு வழக்கில் கடந்த மாதம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியான ராம்பூர் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆசம் கானுக்கு நம்பிக்கைக்குரியவரும் ஊடகப் பொறுப்பாளருமான ஃபசகத் அலி கான் என்கிற ஷானு நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார்.

ராம்பூர் தொகுதிக்கான சமாஜ்வாதி வேட்பாளராக அசிம் ராஜா அறிவிக்கப்பட்டதில் ஷானு அதிருப்தி அடைந்தார். முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு கட்சித் தலைமை மதிப்பளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஷானு தனது ஆதரவாளர்களுடன் உ.பி. பாஜக தலைவர் புபேந்திர சவுத்ரி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

ஆசம் கானின் கோட்டையாக விளங்கும் ராம்பூரை வரும் தேர்தலில் கைப்பற்றும் பாஜகவின் தீவிர முயற்சிக்கான ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT