ஏர்செல்-மேக்சிஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை இதர நிறுவனங் களுக்கு விற்க பேச்சுவார்த்தை நடப்பது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனம் தனது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேசனுக்கு விற்க பேரம் நடத்தி வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் மேக்சிஸ் நிறுவனம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடும். இதை தடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ஜே.எஸ்.கேல்கர், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விற்கப்படும் விவகாரம் குறித்து 2 வாரங்களுக்குள் சிபிஐ, அமலாக்கத் துறை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஏர்செல் மேக்சிஸ் நிறுவன சொத்துகள் வழக்கில் இணைக்கப் படவில்லை என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இதுதொடர்பாக வும் சிபிஐ, அமலாக்கத் துறை விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.