2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் தடுத்தது ராகுல் காந்திதான். சோனியா காந்தி சொந்த விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை துறக்கவில்லை என்று முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் கூறியுள்ளார்.
இந்திரா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த நட்வர் சிங், 2008-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது.
2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சி அமைக்க முற்பட்டபோது சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்பு கிடைத்தது. இத்தாலியைச் சேர்ந்த சோனியா இந்திய பிரதமராகக் கூடாது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து தான் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று சோனியா அறிவித்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு புதன்கிழமை நட்வர் சிங் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியது: சோனியா காந்தி உண்மையிலேயே தனது மனசாட்சி கூறியதன் காரணமாக பிரதமர் பதவியை மறுக்கவில்லை. அவர் இந்திய பிரதமராக தயாராகவே இருந்தார்.
எனினும் அப்போது சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டதுபோல துயரமான முடிவு தனது அம்மா சோனியாவுக்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம்தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணம். இதனை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஒரு மகனாக சோனியா பிரதமராவதை நான் விரும்பவில்லை என்றும் ராகுல் கூறினார். இதனால்தான் சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது, உங்கள் அனுமதியில்லாமல் எந்த நடவடிக்கையும் இருக்காது என்று அப்போது நான் சோனியாவிடம் கூறினேன். ஓர் அரசியல்வாதியாக ராஜீவ் காந்தியை விட சோனியா மேம்பட்டவர் என்றே கூறுவேன். ராஜீவ் காந்தி பரந்த மனதுடையவர். சோனியா சற்று கடுமையான நபர். சோனியா காந்தியிடம் அனைத்து விஷயங்களையும் சகஜமாக பேசிவிட முடியாது என்று நட்வர் சிங் கூறினார்.
1991-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது துணை குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மாவை பிரதமராக்க வேண்டுமென்று சோனியா விரும்பினார். எனினும் தனது உடல்நிலையை காரண மாகக் கூறி சர்மா அதனை ஏற்க வில்லை. இதையடுத்துதான் பி.வி. நரசிம்மராவ் பிரதமரானார் என்றும் நட்வர் சிங் கூறியுள்ளார்.