காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சி நிலவுகிறது. கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் தீவிரவாதி புர்ஹான் வானி காஷ்மீரில் சுட்டுக் கொல்லப் பட்ட பிறகு கடந்த 4 மாதங் களாக கலவரம் நிலவியது.
பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து கல்வீச்சுகள் நடந்தன. பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் கலவரம் நீடித்தது. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்தது. இந்நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் காஷ்மீரில் அமைதி திரும்பி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியை நேற்று நாடாளுமன்ற வளா கத்தில் சந்தித்த மெகபூபா, காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து விவரித்தார். பின்னர் ‘‘காஷ்மீர் மக்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தும் நடவடிக்கை களை தொடங்க வேண்டிய நேரம் இதுதான்’’ என்று வலியுறுத்தினார்.
மெகபூபாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடி, காஷ்மீர் மக்களின் நலனுக்காகவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் மாநிலத்தில் அமைதி தொடரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று மெகபூபாவிடம் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மெகபூபா கூறும்போது, ‘‘காஷ்மீரில் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது. அமைதி திரும்பி உள்ளது’’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழக்க செய்ததை நான் ஆதரிக்கிறேன். இந்த நடவடிக்கையால் நாட்டு மக்கள் பலனடைவார்கள்’’ என்று மெகபூபா தெரிவித்தார்.