இந்தியா

கன்னட படப்பிடிப்பின்போது ஏரியில் மூழ்கிய நடிகர்களின் உடலை தேடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

பெங்களூரு அருகே கன்னட படப் பிடிப்பின்போது ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்து நீரில் மூழ்கிய 2 நடிகர்களின் உடல் களைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ராம்நகர் மாவட்டம், மாகடி அருகே திப்ப கொண்டனஹள்ளி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்கும் ‘மஸ்தி குடி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட‌ படப்பிடிப்பு நேற்று முன் தினம் நடைபெற்ற‌து. அப்போது துனியா விஜய், வில்லன் நடிகர்கள் அனில், உதய் ஆகியோர் 100 அடி உயரத்தில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

இதில் ஏரியில் குதித்த மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்தன‌ர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு சண்டை நடிகர் ஏரியில் குதித்து துனியா விஜயை மீட்டு கரைக்கு இழுத்து வந்தார். இத னால் நூலிழையில் உயிர் தப்பி னார். ஆனால் அனில், உதய் ஆகிய இருவரும் படக்குழுவினர் கண் முன்னே நீரில் மூழ்கினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை முதல் மீட்பு படையினர் 3 படகுகள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராம்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திர குப்தா தலைமையில் 2-ம் நாளாக நேற்று முழுவதும் தேடிய பின்னரும் இருவரின் உடல்களையும் கண் டெடுக்க முடியவில்லை. ஏரியில் இருந்து மீட்கப்பட்ட துனியா விஜயை ஏரியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தேடிய போதும் இருவரின் உடல்களையும் மீட்க முடியவில்லை.

ஏரியின் நடுப்பகுதி சுமார் 20 முதல் 30 அடி ஆழம் கொண்டது. இதில் பீனியா தொழிற்பேட்டை யின் கழிவுகள் அதிகளவில் கலப்ப தால் 10 முதல் 15 வரை சேறு படிந்திருக்கும். நீரில் மூழ்கிய இரு வரும் சேற்றுக்குள் புதைந்திருக்க லாம் என மீட்பு குழுவினர் சந்தேகிக்கின்றனர். எனவே நள்ளிரவில் மீட்பு பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

5 பிரிவுகளில் வழக்கு பதிவு

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத படக்குழுவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த நடிகர்களின் குடும்பத் துக்குத் தயாரிப்பாளர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கன்னட திரையுலகில் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் திப்பகொண்டன ஹள்ளி ஏரியின் பொறுப்பாளர் அனுசுயா அளித்த புகாரின் அடிப் படையில் மஸ்திகுடி திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் பி.கவுத்ரு, இயக்குநர் நாகசேகர், சண்டைப்பயிற்சி இயக்குநர் ரவி வர்மா உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டம் 304, 188, 34 உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே உயிரிழந்த உதய், அனில் ஆகியோரின் குடும்பத்தினரை நடிகர்கள் சிவராஜ் குமார், சுதீப் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT