*
பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழு வதும் பணப் புழக்கம் குறைந்து அத்தியாவசிய பொருட்கள் நுகர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் இளைஞர் கள் சிலர் ஆதியில் இருந்த பண்டமாற்று முறையை புகுத்தி நெருக்கடி சுவடுகளைத் துடைத் தெறிந்துள்ளனர்.
சிவம் திவான் (23). டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பஸ் பகுதியில் தெருவோர காபி கடை நடத்தி வருபவர். ஒருநாள் தனது கடையின் முகப்பு பகுதிகளில் வண்ணமயமான பதாகைகளை ஒட்டி, அதில் ‘‘பண மில்லா உலகம்’’ என்ற தகவலை அறிவித்தார். ‘பகிர்ந்தால் ஒற்றுமை பிறக்கும்’ என்ற வாசகமும் பலரை ஈர்த்தது. சரி, அந்த கடைக்கு பெயர் என்ன தெரியுமா? ‘எக்ஸ் சேஞ்ச் ஓவர் காபி’. நகரத்தில் பணமில்லாமல் காபியும், சாப்பாடும் கிடைக்கும் ஒரே கடை இவருடையது தான். இதனால் தான் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு இவரது கடை முன்பை விட சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
‘‘பணம் கொடுத்து நுகர்வு செய் வதை விட, பொருள் கொடுத்து நுகர்வு செய்யும் பண்டம் மாற்று முறையை பிரபலப்படுத்தி வரு கிறோம். எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்துக்கு பதிலாக புத்தகத்தை பெறுகிறோம். சொன்னால் ஆச்சரி யப்படுவீர்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், கடந்த 10 நாட் களில் புத்தகத்தைக் கொடுத்து காபியும், சாப்பாடும் வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 60 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது’’ என்கிறார் திவான்.
ஆறு மாதங்களுக்கு முன் பண்ட மாற்று முறையை அறிமுகம் செய்திருக்கிறார் திவான். ஆனால் அதற்கான அறுவடை தற்போது தான் வேகம் பிடித்திருக்கிறது.
இதேபோல் பார்டர் டாடி (பண்டமாற்று தந்தை) மற்றும் லெட்ஸ் பார்டர் இந்தியா போன்ற ஆன்லைன் சமூகங்களும் பண மில்லா உலகை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றன. கடந்த 10 நாட் களில் இந்த இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 150 சதவீதம் வரை அதிகரித் துள்ளது.
லெட்ஸ் பார்டர் இந்தியாவின் நிறுவனர் சாஹில் திங்கரா (25) கூறும்போது, ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், எங்களது தளத்துக்கான பயன்பாடு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மளிகைப் பொருட்கள், பிரீபெய்டு ரீச்சார்ஜ், கலைநிகழ்ச்சிகளுக்கான நுழைவுச்சீட்டுகள் வரை பண்ட மாற்று பொருட்களின் பட்டியல் நீள்கிறது. முகநூலில் எங்களிடம் உறுப்பினராக சேர்ந்த நபர் ஒருவர் ரூபாய் நோட்டு தடைக்குப் பின் ஒருநாள் ஆட்டோவில் பயணித் தார். ஆனால் அதற்கான பணத்தை ஒருகிலோ அரிசியாக வழங்கினார். மற்றொருவர் எங்களது செயலியை பெற 5 கிலோ அரிசி வழங்கினார்’’ என்கிறார்.
காப்பி கடை நடத்தும் சிவம் திவான், எரிசக்தி திறன் பொறியாள ராக கடந்த ஆண்டு வரை பணி யாற்றி வந்தவர். வாழக்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பதற்காக அந்த வேலையை அப்படியே கைகழுவிவிட்டு பண்ட மாற்று காபி கடையை வைத்து விட்டார்.
திங்கராவும் அப்படித்தான் மரச்சாமான்கள், கம்ப்யூட்டர்கள், டேப்லட்டுகள் என மிகப் பெரிய நுகர் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்கான உரிய விலை கிடைக்காததால் கடையை அப்படியே சார்த்திவிட்டு பண்ட மாற்று முறைக்குத் திரும்பிவிட்டார்.
குர்கானைச் சேர்ந்த ஹரிந்தர் சிங் (34) பார்டர் டாடியின் நிறு வனர். இவரும் பண்டமாற்று கலாச் சாரத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல முயற்சித்து வரு கிறார். ‘‘எனது தளத்தில் ரியல் எஸ்டேட் பிரிவை உருவாக்கியுள் ளேன். அதன் மூலம் சொந்த வீடு களை மக்கள் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள முடியும். சந்தேகம் வேண் டாம். நிச்சயம் ஒருநாள் நடக்கும்’’ என்கிறார் நம்பிக்கையாக.
புத்தகத்துடனும், தனது வாடிக்கையாளருடனும் சிவம் திவான் (வலது).