புதுடெல்லி: உலக மக்கள் தொகை எண்ணிக்கை நேற்று 800 கோடியை எட்டியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
உலக மக்கள் தொகை எண்ணிக்கை நேற்று 800 கோடி எட்டியது. இதை முன்னிட்டு ஐ.நா மக்கள் தொகை நிதி அமைப்பு (யுஎன்எஃப்பிஏ) சிறப்பு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடி அளவை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை 2037-ம் ஆண்டுக்குள் 900 கோடியாக உயரும். இவர்களில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் மக்கள் அதிகளவில் இருப்பர். ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். கடந்த 12 ஆண்டுகளில் உலக மக்கள் தொகையில் 100 கோடி பேர் இணைந்துள்ளனர். அடுத்த 100 கோடி பேர் இணையும் போது அதில் சீனாவின் பங்களிப்பும் குறைவாக இருக்கும். உலக மக்கள் தொகை 800 கோடியாக அதிகரித்ததில் அதிக பங்களிப்புள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர். அதே நேரத்தில் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடான சீனாவில் இருந்து 7 கோடியே 30 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.
உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும்போது, சீனாவின் பங்களிப்பு எதிர்மறையாக இருக்கும். உலக மக்கள் தொகையில் அடுத்த 100 கோடி பேர் இணைய 14.5 (2037) ஆண்டுகள் ஆகும். இது உலகளாவிய வளர்ச்சி மந்தமாக உள்ளதை காட்டுகிறது.
2080-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1040 கோடியாக உயரும்என மதிப்பிடப்படுகிறது. உலகமக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரித்ததில் 70% மக்கள், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய்பிரிவு நாடுகளில் இருந்து இணைந்துள்ளனர். 900 கோடியை எட்டும்போது, இந்தப் பிரிவினரின் பங்களிப்பு 90% மாக இருக்கும்.
தற்போதிலிருந்து 2050-ம் ஆண்டு வரை, 65 வயதுக்கு கீழ்உள்ளவர்களின் எண்ணிக்கை, குறைந்த வருவாய் மற்றும் நடுத்தரவருவாய் பிரிவினர் உள்ள நாடுகளில் அதிகரிக்கும். அதிக வருவாய்உள்ள நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம். சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சம். அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும். 2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 166 கோடியே 80 லட்சமாக இருக்கும். இந்திய மக்கள் தொகையில் தற்போது 15 வயது முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் 68 சதவீதம் பேர் உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேர் உள்ளனர்.
கடந்த 1950-ம் ஆண்டிலிருந்து உலக மக்கள் தொகையின் வளர்ச்சிவீதம் குறைவாக உள்ளது. கடந்த2020-ம் ஆண்டில் இதன் அளவு1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 2030-ம் ஆண்டில் உலகமக்கள் தொகை 850 கோடியாகவும், 2050-ம் ஆண்டில் 970 கோடியாகவும் உயரும். அடுத்தாண்டின் துவக்கத்திலேயே சீன மக்கள் தொகை இறங்குமுகமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.