ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் மூத்த நடிகர் கிருஷ்ணா (79), உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையாவார்.
என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, கிருஷ்ணம்ம ராஜு ஆகிய மூத்த தலைமுறை நடிகர்களுடன் சம காலத்தில் நடிகராக அறிமுகமாகி 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கிருஷ்ணா.
நடிகர் கிருஷ்ணாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 2.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணாவின் மறைவுச்செய்தியை அறிந்த சினிமா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் நேரில் சென்று பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தெலங்கானா மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் கச்சுபவுலி விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டடது. இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் கிருஷ்ணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.