இந்தியா

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை: மோடி மீது கேஜ்ரிவால் பாய்ச்சல்

செய்திப்பிரிவு

ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்குவதாக கூறி டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் குடும்பத்தினரை ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சந்திக்க முயன்ற டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் எம்.எல்.ஏ. சுரேந்தர் ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

கிரேவால் குடும்பத்தினரும் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தியதை அடுத்து அவர்களையும் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், “மனிஷ் சிசோடியாவைக் கைதா? ராம்கிஷன் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றார் மனிஷ். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணை முதல்வர். மோடி உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? உங்கள் மீது உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பின்மை உணர்வா?” என்று கேட்டுள்ளார்.

மேலும், ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தில் பிரதமர் நாட்டு மக்களை ஏமாற்றி விட்டதாக சாடிய கேஜ்ரிவால், ஒருவர் இதற்காக தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது என்றார்.

ராணுவத்தில் காயமடைந்து ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கான மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தையும் குறைத்து, அவர்களின் பதவிப் படிநிலையையும் குறைக்கப்பட்டுள்ளது என்று சாடிய கேஜ்ரிவால் இவற்றை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உரி தாக்குதலில் பலியான ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் துல்லியத் தாக்குதலை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதாவது ராணுவ வீரர்கள் உயிரை அரசியல் ஆதாயமாக்குவதை மோடி அரசு தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் கேஜ்ரிவால்.

SCROLL FOR NEXT