ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில், காஷ்மீர் இந்த விவகாரத்தை சுமுகமாகக் கையாண்டுவருகிறது.
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பிக்கும் எலிசபெத் மரியம் இதுகுறித்துக் கூறும்போது, ''ஏற்கெனவே நிலவி வந்த பதற்ற சூழல் காரணமாக சாதாரண மக்கள் யாரும் வீட்டில் அதிகப் பணத்தை வைத்திருக்கவில்லை.
மாதச் சம்பளக்காரர்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் மூலம் ஆன்லைனில் சம்பளம் பெறுகின்றனர். உடலுழைப்பு மூலம் ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவரும், தாங்கள் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்பவர்களாக இருக்கின்றனர்.
தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும்கூட, எல்லைப் பிரச்சனை காரணமாக அதிகப் பணத்தை வீட்டில் வைத்திருக்கவில்லை. இதனால் ரூபாய் நோட்டு மாற்றம் காஷ்மீரில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.
ஜம்மு காஷ்மீர் வங்கி அலுவலர் நஸீர் குஸி இது குறித்துப் பேசும்போது, ''கடந்த எட்டு நாட்களாக காஷ்மீரின் எந்த வங்கியிலும், ஏடிஎம்மிலும் பெரியளவில் கூட்டம் கூடவில்லை.
பழைய நோட்டுகளை மாற்றவும், பணத்தைக் கணக்கில் வைக்கவும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் யாரும் இதற்காகக் கலங்கவில்லை'' என்றார்.
கல்லூரி முதல்வர் முஸாஃபர் அகமது கூறும்போது, ''போராட்டங்கள் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த காஷ்மீரின் நிலையை பணத்தட்டுப்பாட்டால் மேலும் அதிகரிக்கச் செய்ய யாரும் விரும்பவில்லை'' என்றார்.
அதே நேரம், ரூபாய் நோட்டு மாற்றத்தால் பள்ளத்தாக்கில் கல் எறிவதும், தீவிரவாத தாக்குதல்களும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் ரூபாய் நோட்டு மாற்றத்தால் கல் வீசித் தாக்குதல் நடத்துவது முடிவுக்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ''கள்ள நோட்டுகள் புழக்கம் தீவிரவாதத்துக்கான முக்கியக் காரணமாக இருந்தது. இனி புது நோட்டுகள் வந்த பின்னர் அது தொடர நீண்ட காலமாகாது'' என்று உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.