இந்தியா

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்தி வைத்த தந்தை, ‘மதபோதகர்’ கேரளாவில் கைது

செய்திப்பிரிவு

கோழிக்கோடு முக்கம் பகுதியில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று நிறுத்தி வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அபுபக்கர் சித்திக் என்பவரும் அவருக்கு உடந்தையாக இருந்த கலாம்தோட் ஹைட்ரோஸ் தங்கல் என்ற மதபோதகரும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

ஹஃப்சத் என்ற தனது மனைவி பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதை மதக்காரணங்களைச் சுட்டிக் காட்டி 21 மணி நேரம் நிறுத்தி வைத்தார் கணவர் அபுபக்கர் சித்திக். அதாவது மசூதிகளின் தொழுகைகளை குழந்தை 5 முறை கேட்ட பிறகுதான் தாய்ப்பால் அளிக்க வேண்டும் என்று கூறி 21 மணி நேரம் நிறுத்தி வைத்தார்.

உள்ளூர் மதபோதகர் கலாம்தோட் ஹைட்ரோஸ் தங்கல் என்பவரும் பிறந்த குழந்தை 5 முறை தொழுகைகளைக் கேட்ட பிறகே தாய்ப்பால் எடுத்துக் கொள்ள வேண்டும் அதுவரை தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று போதனை செய்து வந்ததாக புகார் எழுந்தது, இந்நிலையில் குற்றத்திற்கு துணைபோனதாக இவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர் தனது இடத்தில் கூட்டத்தை அடிக்கடி கூட்டி மூடநம்பிக்கைகளை பரப்பி வருவதாக புகார் இருந்து வந்தது. உடல் நலம் குன்றியவர்கள் மருத்துவ உதவி பெறாமல் நீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டால் குணமாகிவிடும் என்றெல்லாம் அவர் பிரச்சாரித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டி.ஒய்.எஃப்.ஐ) தொண்டர்கள் மற்றும் சில அமைப்புகள் இந்த மதபோதகர் வீடு நோக்கி போராட்ட பேரணியை இன்று மேற்கொண்டனர், மேலும் இவரது மூடநம்பிக்கைகளை நம்பவேண்டாம் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் தாய்ப்பால் கொடுப்பதைத் தடுத்த கணவர் சித்திக் தனது முகநூல் பக்கத்தில் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். உணர்வு ரீதியான பிரச்சினைகள், குருட்டு நம்பிக்கை மற்றும் தவறான வழிகாட்டுதலால் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். எந்த ஒரு தந்தையும் குழந்தையை பட்டினி போடக்கூடாது என்று தனது பதிவில் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார் மேலும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவ குழந்தைகள் உரிமைகளுக்கான கேரள மாநில கமிஷன் வெள்ளியன்று தந்தையையும் அதற்கு உடந்தையான மதபோதகரையும் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT