நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மத்திய அரசு மீது அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இந்த விவ காரம் தொடர்பாக மக்களவையில் பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரி வித்துள்ளார்.
இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் அவை அலுவலை ரத்து செய்து விட்டு பணத் தட்டுப்பாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
காஷ்மீர் கலவரம் குறித்து விவாதம் நடத்தக் கோரி மாநிலங் களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளு மன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபா நாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றிரவு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தினார். இதில் அவையை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடை பெற்றது. இதில் முக்கிய வியூகங் கள் வகுக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.