இந்தியா

வெளிநாடுகளில் இருந்து பணம் பெற சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அறக்கட்டளைக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக். இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்) கல்வி அறக்கட்டளை, இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஆர்எப்), ‘பீஸ் டிவி’ ஆகிய வற்றை நிறுவியுள்ளார். தீவிர வாதத்தை தூண்டும் வகையில் இவர் மதப் பிரச்சாரம் செய் கிறார்.

மற்ற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனை வரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார் என்று ஜாகீர் நாயக் மீது சரமாரியாக புகார்கள் எழுந்துள்ளன.

அவர் மீது மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு நிறுவனங்களும் ஜாகீர் நாயக், அவரது அமைப்புகள், பீஸ் டிவி குறித்து தொடர்ந்து கண்காணித்து மத்திய அரசுக்குப் பல்வேறு தகவல்களை அனுப்பி உள்ளன.

அதன் அடிப்படையில், ஜாகீர் நாயக்கின் ஐஆர்எப் அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பான கடைசி நோட்டீஸும் அனுப்பப் பட்டுள்ளது.

தீவிரவாதத்தை தூண்டி வருகிறார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோது ஜாகீர் நாயக் வெளிநாட்டில் இருந்தார். தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், இந்தியா வந்தால் கைது செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் அவர் நாடு திரும்பாமல் உள்ளார்.

இந்நிலையில், அவரது ஐஆர்எப் கல்வி அறக் கட்டளையை, முன் அனுமதி பெறும் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இது குறித்த அறிவிப்பாணையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து ஒவ்வொரு முறை அன்பளிப்பு தொகை பெறுவதற்கு முன்னர் மத்திய உள்துறையிடம் கல்வி அறக்கட்டளை அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பாணை யில் கூறும்போது, ‘‘வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அறக் கட்டளைக்கு வந்த பணத்தை, பீஸ் டிவி.க்கு மாற்றி பயன்படுத்தி உள்ளனர். அந்த டிவி.யில் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் ஜாகீர் நாயக் பேசியுள்ளார். எனவே, வெளிநாட்டு அன்பளிப்புகளை பெறுவதற்கு முன்னர் மத்திய அரசிடம் முன் அனுமதி பெறுவது கல்வி அறக்கட்டளைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT