இந்தியா

தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்.பி. வீட்டில் சோதனை

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி ரவிச்சந்திராவின் வீட்டில் நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2-வது நாளாக தெலங்கானா மாநிலத்தில் அமலாக்க துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்பியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு வரை சோதனை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத் துறை அமைச்சர் கமலாகர் வீடு மற்றும் அலுவலகத்திலும், அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் ஒரே சமயத்தில் சோதனை நடைபெற்றது. 20 குழுக்களாக பிரிந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில், நேற்று அதே ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி ரவிச் சந்திராவுக்கு சொந்தமான ஸ்ரீநகர் காலனி வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவருக்கும் கிரானைட் முறைகேட்டுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தமது கட்சி அமைச்சர் மற்றும் எம்பியின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதை அறிந்த தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், நேற்று இவர்கள் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர் சோதனைகளால், மாநில அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT