புதுடெல்லி: கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, நெஞ்சில் எரிச்சல், ரத்தம் உறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் குறைந்தது ஓராண்டுக்கு ஏற்படுகிறது. கரோனா வைரஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரோட்டீன், இதய திசுக்கள் பாதிப்புக்கு காரணம் என்பதை அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த பாதிப்பை குணப்படுத்த இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் லேபரெட்டரி, ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்துடன் (டிஆர்டிஓ) இணைந்து ‘2டிஜி’ (2-டியாக்சி - டி-குளுக்கோஸ்) என்ற பவுடர் மருந்தை உருவாக்கினர்.
இதை வாய் வழியாக சாப்பிட வேண்டும். இந்த மருந்து, உடலில் சக்திக்கு காரணமான குளுக்கோஸ் உடைவதை தடுத்து, வைரஸின் வளர்ச்சியை தடுக்கிறது.
இந்த மருந்தை மேரிலேண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பயன்படுத்தி எலிகள் மற்றும் பழ ஈக்கள் ஆகியவற்றிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கரோனா வால் ஏற்பட்ட இதய பாதிப்பு குணமாவதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
2டிஜி மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றாலும், இந்த மருந்து தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனையில் உள்ளது.