மாகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், பிவாண்டி நகர நீதிமன்றத்தில் ராகுல் நேற்று தன் மீதான அவதூறு வழக்கு தொடர் பாக ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் பேசும் போது, “உண்மையான கறுப்புப் பண சந்தையாளராக விளங்கும் சிலர், ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை வைத்திருப்பவர்கள் பிரதமர் மோடி யுடன் விமானத்தில் செல்கின்றனர். அவர்களுக்கு எதிராகவும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மோடியின் தொழிலதிபர் நண்பர் களுக்கு எதிராக விசாரணையோ அல்லது நடவடிக்கையோ இது வரை எடுக்கப்படவில்லை. நீங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பணம் தேர்வு செய்யப்பட்ட 15-20 தொழிலதிபர்களுக்குத் தரப்படுகிறது. உங்களுக்கு அவர்களின் பெயர் தெரியும். அவர்களுக்கான அரசைத்தான் மோடி நடத்துகிறார்” என்றார்.
முன்னதாக நீதிமன்றத்துக்கு வெளியில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் ராகுல் பேசும்போது, “ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வரிசையில் காத்துள்ளனர். பணக்காரர்கள் அல்லது தொழிலதிபர்கள் எவரேனும் வரிசையில் நிற்பதை காண முடிகிறதா?” என்றார்.
பிறகு பிவாண்டியில் இருந்து திரும்பும் வழியில் வகோலா என்ற இடத்தில், பொதுத்துறை வங்கி ஏடிஎம் ஒன்றின் முன்பு ராகுல் தனது வாகனத்தை நிறுத்தினார். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.