இந்தியா

நாடாளுமன்ற துளிகள்: 7,824 கிராமங்களுக்கு மின்வசதி இல்லை

செய்திப்பிரிவு

மக்களவை, மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:

பள்ளிகளில் கழிப்பறை வசதி

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

தூய்மை பள்ளிகள் திட்டத்தின் கீழ், 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், 2,61,400 தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 4,17,796 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் மூலம், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள் பயன்படும் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும், 11.08 லட்சம் அரசுப் பள்ளிகளில் உள்ள 13.58 கோடி சிறார்களுக்கு, இதுபோன்ற பாலின அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.

பட்டினியை ஒழிக்க நடவடிக்கை

திட்டங்கள் துறை இணை அமைச்சர் (பொறுப்பு) ராவ் இந்தர்ஜித் சிங்:

பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள 75 சதவீதம் மக்களுக்கும், நகர் புறங்களில் உள்ள 50 சதவீத மக்களுக்கும் கிடைக்கும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் உயர் மானிய அடிப்படையில் உணவு தானியங்கள் மத்திய அரசால் ஒதுக்கப்படுகின்றன.

உலக பட்டினி குறியீட்டெண் பட்டியலில் இடம் பெற்றுள்ள 118 நாடுகளில் இந்தியா தற்போது, 97-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-ல் இப்பட்டியலில் இடம் பெற்ற 104 நாடுகளில் இந்தியா, 80-வது இடத்தில் இருந்தது.

மின் வசதியில்லா கிராமங்கள்

மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல்:

கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 18,452 கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இதில், 10,628 கிராமங்களுக்கு கடந்த அக்டோபர் 31-ம் தேதி மின் வசதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 7,824 கிராமங்கள் 2018 மே மாதத்தில் மின் வசதி பெறும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 2.67 சதவீம் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் பல்வேறு காரணங்களால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.

சரஸ்வதி நதி: நிபுணர் குழு அறிக்கை

புராணங்களில் இடம்பெறும் சரஸ்வதி நதி, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் பாய்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு, மத்திய நீர்வளங்கள் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கும்போது,

‘இமய மலையில் தோன்றிய நதி ஒன்று, ஜக்கர்-ஹகாரா-நரா வழியாக மிக அகண்ட பாதையில் பாய்ந்து, கட்ச் பாலைவனம் உள்ள பகுதியை அடைந்தததாக தொலையுணர்வு, புவிவியல் மற்றும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையிலான ஆய்வு மூலம் நிபுணர் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

மேலும் பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.

வாடகைத்தாய் ஒழிப்பு மசோதா

வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் முறையை ஒழிக்க, புதிய சட்ட மசோதாவை, சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்ட (2016) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், வர்த்தக ரீதியிலான வாடகைத்தாய் முறை ஒழிக்கப்படும்.

அதே சமயம், குழந்தையின்மை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட தம்பதியர் கடுமையான சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வாடகைத்தாய் முறையால் பயன்பெறவும் இச்சட்ட மசோதா இடமளிக்கிறது.

அதேபோல், வாடகைத்தாய் முறையின் மூலம் பிறந்த குழந்தையின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வழங்கும் வகையிலும் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT