மக்களவை, மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்த பதில்களின் சுருக்கமான தொகுப்பு:
மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்: டாடா மோட்டார்ஸ் மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.1,000 கோடி வரை வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் டாடா மோட்டாஸ் நிறுவனத்தின் சுங்க வரி நிலுவை ரூ.629.76 கோடியும், சேவை வரி நிலுவை ரூ.516.09 கோடியாகவும் உள்ளது. மொத்தமாக அந்நிறுவனம் ரூ.1,145.85 கோடி வரி நிலுவை வைத்துள்ளது. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சேவை வரி மற்றும் அபராதம் உட்பட ரூ.1,012.96 கோடி செலுத்த வேண்டும். இது துவிர கர்நாடக தொழிற்துறை மேம்பாட்டு வாரியம் (ரூ.2,590 கோடி) மற்றும் கர்நாடக வீட்டுவசதி வாரியமும் (ரூ.1,083 கோடி) வரி நிலுவை வைத்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி: ரொக்கப் பணத்தின் பயன்பாட்டை குறைத்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பணத்தின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது. மொத்தம் உள்ள 80 கோடி டெபிட் கார்டுகளில், 40 கோடி கார்டுகள் ஏடிஎம்களில் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரானிக் வேலட்ஸ் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தான் எதிர்கால தொழில்நுட்பமாக இருக்கும். இதற்கு தேவையான ஊக்கத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. மாநில அரசுகளும் உரிய பங்களிப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுஷ் துறையின் இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்: டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க பாரம்பரிய மருந்துகளை மத்திய ஆயுர்வேத அறிவியில் ஆராய்ச்சி கவுன்சில் மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக டெங்கு நோய்க்காக ஆயுஷ் பிஜே7 என்ற மருந்தும், யானைக்கால் நோய்க்காக ஆயுஷ் எஸ்எல் என்ற மருந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல் மலேரியா, கடுங்காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் யூனானி மருத்துவ முறை மூலம் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல்: சுகாதார பிரச்சினைகளுக்கு விரிவான முறையில் தீர்வு காணும் வகையில் இ-சுகாதார சட்டத்தை அரசு கொண்டு வரவுள்ளது. இந்தச் சட்டம் மூலம் தனிப்பட்ட நபர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். மேலும் தகவல்கள் திருட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்கப்படும். பொதுமக்களுக்கு விரைவில் கருத்தடை ஊசிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசிகள் படிப்படியாக அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக மருத்துவ கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் அறிமுகம் செய்யப்படும். இதே போல் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: விஷ்வ பாரதி, மிசோரம், புதுச்சேரி, நாகாலாந்து ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதே போல் மத்திய பல்கலைக்கழகங்களில் 14 பதிவாளர் பதவிகளும், 19 நிதி அதிகாரி பதவிகளும் காலியாக உள்ளன. துணைவேந்தர் பதவிகளை நிரப்புவது என்பது அதிக காலம் பிடிக்கும் நடைமுறையாக உள்ளது. அதற்கான கால வரம்புகளும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே தான் 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.