இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி: டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு 

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.

நேபாளத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 6.3 ஆக பதிவானது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் அஞ்சி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேத விவரம் குறித்த முழுத் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது. நேபாளநிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக டெல்லியில் உள்ள தேசிய சீஸ்மாலஜி மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இரவு 8.42 மணியளவிலும் நேபாளில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 4.9 ரிக்டராக பதிவான நிலையில் பின்னிரவில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT